தருமபுரி மொரப்பூரில் திருப்பதி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல மத்திய ரெயில்வே மந்திரியிடம் தி.மு.க. எம்.பி. கோரிக்கை
வந்தே பாரத் ரெயில் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
தருமபுரி தொகுதி தி.மு.க. எம்.பி. செந்தில் குமார், டெல்லியில் மத்திய ரயில்வேதுறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தருமபுரி-மொரப்பூர்-சென்னை செல்லும் இணைப்பு ரெயில் திட்டமானது தருமபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் இத்திட்டத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதற்கான நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தருமபுரி-மொரப்பூர் இடையே ரயில் பாதை அமையும் இடத்தில் மூக்கனூர் மற்றும் ஏ.ரெட்டிஹல்லி ஆகிய இரு கிராமங்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
விவசாய மக்களின் நூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகள் இந்த பாதை அமைக்கும் பகுதியில் உள்ளது. இதனால், இந்த நிலங்களை கையகப்படுத்தும் பொழுது நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, ரெயில் பாதை அமையும் இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் அளவுக்கு வேறு பாதையில் இந்த ரெயில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் நல்லது.
இதன்மூலம், இந்த இரு கிராம மக்களின் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காது. எனவே, இந்த வகையில் மத்திய அரசு தனது ரெயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொம்மிடி ரெயில் நிலையத்தில் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. இந்த பட்டியலில், கோவை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ் முக்கியமாக உள்ளன.
இதேபோல், மொரப்பூரில் சென்னை-திருவனந்தபுரம் அதிவேக ரயில், கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று செல்லவும் கோரிக்கை உள்ளது. புதிதாக விடப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை மொரப்பூர் ரெயில் நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பலன் மொரப்பூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்கும் கிடைக்கும்."
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.