'பெண்கள் பாதுகாப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?' - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி


பெண்கள் பாதுகாப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
x

கோப்புப்படம் 

பில்கிஸ் பானு வழக்கில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

கோத்ரா ரெயில் எரிப்புக்கு பின், குஜராத்தில் நடந்த வன்முறைகள் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. அப்போது பில்கிஸ் பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டு, அந்தப் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் ஆயுள் சிறைத்தண்டனையை குறைத்து, விடுதலை செய்யுமாறு குஜராத் மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று கருத்து கூறுகையில், " டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, பெண் சக்தியைப் போற்றிப்புகழ்ந்தார். பிரதமர் மோடி கூறிய வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, அதிகாரம் வழங்குதல் பற்றிய அவரது வார்த்தைகளில் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறாரா என்பதை நாட்டுக்கு கூற வேண்டும்" என வலியுறுத்தினார்.

மேலும், " பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 கைதிகளை குஜராத் பா.ஜ.க. அரசு விடுவித்து இருப்பது, அந்த அரசின் மனநிலையை காட்டுகிறது" எனவும் அவர் சாடினார்.


Next Story