இப்படி பேசினால் என்ன நடக்கும் என தெரியாதா? - அமைச்சர் உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


இப்படி பேசினால் என்ன நடக்கும் என தெரியாதா? - அமைச்சர் உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x

சனாதன பேச்சு தொடர்பான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு மீதான விசாரணை 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும்.

அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நல்லது. எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகள்" எனத் தெரிவித்திருந்தார். இது தேசிய அளவில் விவாதப் பொருளாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தம் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது. உதயநிதி ஸ்டாலின் தரப்பில், சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கவில்லை. அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளோம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், நீங்கள் ஒரு சாமானியர் அல்ல. அமைச்சர் பதவி வகிப்பவர்; அமைச்சராக இருந்து கொண்டு பேசும்போது எதிர்விளைவுகளையும் உணர்ந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள். அமைச்சராக இருக்கும் நபர் இதுபோன்று பேசினால் என்ன நடக்கும் என்பது தெரியாதா?. அந்தந்த நீதிமன்றங்களுக்கு சென்று தடை உத்தரவை பெறுங்கள், நடக்காத பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடுங்கள் என கூறிய நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story