போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது;34 கிலோ கஞ்சா பறிமுதல்


போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது;34 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஹாசனில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரை கைது செய்த போலீசார் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா தெரிவித்துள்ளார்.

ஹாசன்:

ஹாசனில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரை கைது செய்த போலீசார் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா தெரிவித்துள்ளார்.

கஞ்சா விற்பனை

ஹாசன் நகரம், சரவணபெலகோலா, பரங்கி, துத்தா, ஹளேபீடு, சாந்தி கிராமம் ஆகிய போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை நேற்று ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் சூப்பிரண்டு சுஜிதா கூறியதாவது:-

ஹாசனில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் போலீசார் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தி சிலரை கைது செய்துள்ளோம். அதன்படி சரவணபெலகோலா போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குப்பேனஹள்ளியை சேர்ந்த நவீன், சமித்ரா என்ற 2 பேரை கைது செய்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 770 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

சாந்திகிராமம் போலீசார் ஒலேநரசிபுரா தாலுகாவை சேர்ந்த குமார் என்பரை கைது செய்து 920 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். துத்தா போலீசார் அனுகவல்லி கிராமத்தை சேர்ந்த ராஜண்ணா என்பரை கைது செய்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

13 பேர் கைது; 34 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹாசன் நகர போலீசார் ஆதில், ரிஸ்வான், பாஷா, அசார் ஆகியோரை கைது செய்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். பேரங்காடி போலீசார் பீரானஹள்ளிகெரேவை சேர்ந்த பிருத்வி என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல ஹரகஹள்ளி, அரக்கல்கோடு, ஹளேபீடு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 34 கிலோ 694 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story