பா.ஜனதா ஆட்சியில் நல்ல மழை பெய்வதால் தமிழகத்துடன் காவிரி பிரச்சினை வரவில்லை; மந்திரி அசோக் பேட்டி


பா.ஜனதா ஆட்சியில் நல்ல மழை பெய்வதால் தமிழகத்துடன் காவிரி பிரச்சினை வரவில்லை; மந்திரி அசோக் பேட்டி
x

பா.ஜனதா ஆட்சியில் நல்ல மழை பெய்தால் தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் பிரச்சினை வரவில்லை என்று வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பல்லாரி:

பல்லாரியில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சிறைக்கு சென்று, ஜாமீனில் வெளியே...

வருவாய்த்துறை சார்பில் மக்களின் வீடுகளுக்கே ஆவணங்களை கொண்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முதன் முதலில் விஜயநகர் மாவட்டத்தில் தான் தொடங்க வருவாய்த்துறை முடிவு செய்திருந்தது. பா.ஜனதா அரசு மீதும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மீதும் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுகளை கூறி வருவது சரியல்ல. பசவராஜ் பொம்மை ஊழலில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர் இல்லை.

டெல்லியில் இருந்து கர்நாடகம் வரை காங்கிரஸ் தலைவர்கள் பலர் சிறைக்கு சென்றுவிட்டு, ஜாமீனில் வெளியே இருந்து வருகின்றனர். டெல்லி திகார் சிறைக்கு சென்று வந்த தலைவர்களும் காங்கிரசில் தான் இருக்கிறார்கள்.

தமிழகத்துடன் பிரச்சினை வரவில்லை

ஊழல் விவகாரத்தில் காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கூறும் காங்கிரஸ் தலைவர்கள், அதற்கான ஆவணங்களை வெளியிட்டு பேச வேண்டும். 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து ஊழல் செய்தவர்கள், தற்போது ஊழலுக்கு எதிராக பேசுவது வேடிக்கையாக உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வறட்சியே ஏற்படுவதில்லை.

மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பியதால், விவசாய பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தேவைக்கு மீறி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சியில் பெய்த நல்ல மழையால் தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் பிரச்சினை வரவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலே மாநிலத்தில் வறட்சி வந்து விடும்.

இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.

1 More update

Next Story