ராஜஸ்தான் அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
ராஜஸ்தானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அரை மணி நேர இடை வெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.09 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் 4.22 மணிக்கு முதல் நிலநடுக்கமும் அடுத்த மூன்று நிமிடங்களில் அதாவது 4.25 மணிக்கு 3-வது நிலநடுக்கமும் ஏற்பட்டது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்த்நனர். வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்ததையும் காண முடிந்தது.