5 மாநிலங்களில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வழிகாட்டுதல்களை வெளியிட்ட தேர்தல் கமிஷன்


5 மாநிலங்களில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வழிகாட்டுதல்களை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
x

கோப்புப்படம்

இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

மிசோரம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்த மாநிலங்களில் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.

இது தொடர்பாக அந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சொந்த மாவட்டங்கள்

மிசோரம் சட்டசபையின் ஆயுட்காலம் வருகிற டிசம்பர் 17-ந்தேதியும், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் நிறைவடைகின்றன.

தேர்தல் நடைபெற உள்ள ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களில் தேர்தலுடன் தொடர்புடைய அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டம் அல்லது ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் அமர்த்தப்படக்கூடாது என்ற நிலையான கொள்கையை தேர்தல் கமிஷன் பின்பற்றி வருகிறது.

அதன் அடிப்படையில் தேர்தலுடன் நேரடியாக தொடர்புடைய எந்த அதிகாரிகளும் தற்போது பணிபுரியும் மாவட்டம் (வருவாய் மாவட்டம்) அவர்களது சொந்த மாவட்டமாக இருந்தால் அதில் தொடர அனுமதிக்கக்கூடாது.

போலீஸ் அதிகாரிகள்

இதைப்போல தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் அல்லது வருகிற 31-ந்தேதி (மிசோரம்) அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதிக்கு முன் 3 ஆண்டுகளை நிறைவு செய்பவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் கமிஷனின் இந்த அறிவுறுத்தல்கள் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாநில ஆயுதப்படை கமாண்டர்கள், எஸ்.எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் பொருந்தும்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள்

கடந்த காலங்களில் தேர்தல் கமிஷனால் ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எந்த காரணம் கொண்டும் தேர்தல் தொடர்பான பணிகள் ஒதுக்கக்கூடாது.

இதைப்போல கோர்ட்டுகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் எந்த அதிகாரிக்கும் தேர்தல் பணிகளோ, அது சார்ந்த பணிகளோ வழங்கக்கூடாது.

இவ்வாறு ேதர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


Next Story