ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் தேதி மாற்றியமைப்பு; தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை நவம்பர் 25-ந்தேதிக்கு மாற்றியமைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.
அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சத்தீஷ்கார் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல், மத்தியபிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவுக்கு நவம்பர் 30ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை மாற்றியமைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, நவம்பர் 25-ந்தேதிக்கு ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.