56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு


56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2024 10:25 AM GMT (Updated: 29 Jan 2024 12:27 PM GMT)

மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், உத்தரபிரதேசம், பீகார், சத்தீஷ்கர், குஜராத், அரியானா, ஆந்திரா, மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20-ம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம்.

உத்தரபிரதேசம் (10), மராட்டியம் (6), பீகார் (6), மேற்கு வங்காளம் (5), மத்தியபிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகம் (4), ஆந்திரபிரதேசம் (3), தெலுங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிசா (3), உத்தரகாண்ட் (1), சத்தீஷ்கர் (1), அரியானா (1) மற்றும் இமாச்சலபிரதேசம் (1) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மேலும், 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைய உள்ளது.


Next Story