சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது


சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது
x

கோப்புப்படம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக செலுத்திய நகையை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சியின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சன்னதியில் இருந்த காணிக்கை பெட்டியில் 10.95 கிராம் எடையிலான வளையலை காணிக்கையாக செலுத்தினார். ஆனால், இந்த வளையல் காணிக்கை வரவு கணக்கில் காட்டப்படவில்லை.

கேமரா காட்சிகள் ஆய்வு

காணிக்கை பெட்டியில் போடப்பட்ட தங்க வளையல் மாயமாகி இருப்பது தேவஸ்தான அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுபற்றி சபரிமலை செயல் அதிகாரி லஞ்சஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் கடந்த 18-ந்தேதி சன்னிதானத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

தேவஸ்தான ஊழியர் கைது

அப்போது, சன்னிதானத்தில் திருநடை காணிக்கை பெட்டியில் போடப்படும் காணிக்கைகள் பெல்ட் மூலமாக காணிக்கை சேகரிக்கப்படும் அறைக்கு செல்வதும், அங்கு வந்த வளையலை பணியில் இருந்த தேவஸ்தான ஊழியரான ரெஜிகுமார் (வயது 45) என்பவர் திருடியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலம் போலீசார் ரெஜிகுமார் திருடியதை உறுதிபடுத்தினர்.

பின்னர், ரெஜிகுமாரின் அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது தலையணைக்கு அடியில் மாயமான வளையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெஜிகுமாரை கைது செய்து அவரை பம்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பம்பை போலீசார் அவரை ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story