வனத்துறைக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் மீட்பு


வனத்துறைக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் மீட்பு
x

தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட வனத்துறைக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

கோலார் தங்கவயல்:

தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட வனத்துறைக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

160 ஏக்கர் நிலம்

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா ஒகலகெரே கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மா மரங்கள் உள்ளிட்ட பல்வேறு விளை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அத்துடன் 8 ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டிருந்தது. இது தவிர தோட்டத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்க 20 தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அங்கு சென்ற வனத்துறையினர் 25-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மாமரம், தென்னை மரங்களை அழித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். நேற்று முன்தினம் மட்டும் 160 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

2-வது நாளாக மீட்பு நடவடிக்கை

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு நிலம் மீட்கும் பணி நடந்தது. 150 வனத்துறை அதிகாரிகள், 60 போலீசார் 25 பொக்லைன் வாகனங்கள் உள்பட பல்வேறு அதிநவீன வாகனங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டு இருந்த மா மரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்தனர். அங்கிருந்த தற்காலிக குடியிருப்புகளும் அகற்றப்பட்டன.

இதை அறிந்த தோட்ட உரிமையாளர் மஞ்சுநாத், போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். நேற்றும் 150 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story