குஷால்நகரில் விளைநிலங்களுக்குள் புகுந்து 17 காட்டுயானைகள் அட்டகாசம்


குஷால்நகரில்  விளைநிலங்களுக்குள் புகுந்து 17 காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:47 PM GMT)

குஷால்நகர் தாலுகாவில் விளைநிலங்களுக்குள் 17 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் நாசமாகின.

குடகு-

குஷால்நகர் தாலுகாவில் விளைநிலங்களுக்குள் 17 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் நாசமாகின.

காட்டுயானைகள்

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா ஹாரங்கி அணை அருகே அத்தூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 17 காட்டுயானைகள் கூட்டமாக வெளியேறின. அவை அத்தூரு கிராமத்திற்குள் புகுந்தன.

மேலும் அவை கிராமத்தில் வசித்து வரும் நரேந்திரா, சுரேஷ், உமேஷ், காவ்யா, குஷாலப்பா, ராஜேஷ், லோகிதாஸ்வா, ரமேஷ், சித்தார்த், ரபீக், ஜெயசெங்கப்பா ஆகியோரின் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும், தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தின.

காபித்தோட்டம், வாழைத்தோட்டம், தென்னை மரங்கள், நெற்பயிர்கள் உள்பட ஏராளமான பயிர்கள் நாசமாகின. இதன்மூலம் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நிவாரண நிதி

இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பந்தங்கள் காண்பித்தும், பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து உரிய நிவாரண நிதி பெற்றுத்தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். காட்டுயானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகளும், கிராம மக்களும் பீதி அடைந்துள்ளனர்.


Next Story