சோனியாஜி தயாராக இருந்தபோதும் பிற்பகல் 3 மணிக்கு பின் அமலாக்க துறையிடம் கேள்விகள் இல்லை; காங்கிரஸ்


சோனியாஜி தயாராக இருந்தபோதும் பிற்பகல் 3 மணிக்கு பின் அமலாக்க துறையிடம் கேள்விகள் இல்லை; காங்கிரஸ்
x

கொரோனா பாதிப்புகளால் சோனியா காந்தி வேண்டுகோளை ஏற்று அமலாக்க துறை விசாரணையை நிறுத்தியது என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.



புதுடெல்லி,



நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். சோனியா காந்தியுடன், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார்.

சோனியா காந்தியிடம் இன்று நடைபெற்ற 3 மணி நேர விசாரணை நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஜூலை 25-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோனியா காந்தி அமலாக்க துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்பட நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் வாகனங்கள் மீது தீ வைப்பு போராட்டமும் நடந்தது.

காங்கிரசுக்கு ஆதரவாக, தி.மு.க., சி.பி.ஐ.(எம்.), டி.ஆர்.எஸ்., சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், சி.பி.ஐ., ஆர்.எஸ்.பி., ஐ.யு.எம்.எல்., என்.சி. மற்றும் ம.தி.மு.க ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொது செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டு உள்ள செய்தியில், விசாரணையை முடிக்கும்படி அதிகாரிகளிடம் சோனியா காந்தி எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை. ஆனால், எங்களிடம் கேள்விகள் எதுவும் இல்லை. நீங்கள் போகலாம் என அமலாக்க துறையினரே கூறியுள்ளனர்.

சோனியாஜி, நான் இரவு 8, 9 மணி வரை இருக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் உங்களிடம் எவ்வளவு கேள்விகள் உள்ளனவோ, அவற்றை கேளுங்கள் என கூறினார்.

அமலாக்க துறையிடம், பிற்பகல் 3 மணிக்கு பின்னர் கேட்பதற்கு கேள்விகள் எதுவும் இல்லை. விசாரணையை முடித்து கொள்ளும்படி சோனியாஜி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என உங்களுக்கு நான் தெளிவுபடுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டதற்காக விசாரணையை முடித்து கொள்ள சோனியா காந்தி விடுத்த வேண்டுகோளை ஏற்று அமலாக்க துறை விசாரணையை நிறுத்தியது என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. கேட்பதற்கு கேள்விகள் எதுவும் அமலாக்க துறையிடம் இல்லாத நிலையில், விசாரணை முடித்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story