இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்; பிரதமரை விமர்சித்த பாகிஸ்தானுக்கு பதிலடி


இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்; பிரதமரை விமர்சித்த பாகிஸ்தானுக்கு பதிலடி
x

இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார் என பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தானுக்கு முஸ்லிம் அமைப்பின் தலைவர் பதிலடி அளித்துள்ளார்.



அஜ்மீர்,


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பேசிய மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் பாகிஸ்தானை சாடி பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என குறிப்பிட்டார்.

அவரது இந்த சர்ச்சை கருத்து இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து தொடர்பாக அவருக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவலுக்கு, அகில இந்திய சுபி சஜ்ஜதன்ஷின் கவுன்சிலின் தலைவரான ஹஜ்ரத் சையது நசீருதீன் பதிலளித்து கூறும்போது, இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம் என்பது பூட்டோவுக்கான எனது அறிவுரை.

எங்களது அரசியல் சாசனம் அனைத்து மதங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார் என பதிலடி அளித்துள்ளார்.

பாகிஸ்தானிய முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன், நல்ல நிலைமையில் உள்ளனர் என்பதனை பாகிஸ்தான் நினைவுகூர வேண்டும்.

பாகிஸ்தானிய அரசாட்சியின் கீழ், பாகிஸ்தானில் வைத்து, அமெரிக்க படைகளால் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை பிலாவல் பூட்டோ மறந்து விட்டார்.

பிரதமர் மோடிக்கு எதிரான பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியின் நஞ்சு கலந்த அவரது பேச்சுக்கு நான் கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றேன். பிலாவல், அவரது பதவிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த அவரது நாட்டுக்குமே இழுக்கை ஏற்படுத்தி விட்டார் என கடுமையாக சாடியுள்ளார்.


Next Story