கட்டாய நடவடிக்கை கூடாது.. டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல்


கட்டாய நடவடிக்கை கூடாது.. டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல்
x
தினத்தந்தி 21 March 2024 6:23 AM GMT (Updated: 21 March 2024 7:20 AM GMT)

அமலாக்கத்துறையின் சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறி சம்மனுக்கு ஆஜராகாமல் மறுத்து வருகிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது.

இதில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் மார்ச் 16-ம் தேதி ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 16ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடைவிதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார். அதில், விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை எதுவும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றும், தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டேன் என ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இதற்கு முன்பாக அமலாக்கத்துறையின் 9-வது சம்மனுக்கு எதிராக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வக்கீல், அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜரானால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு தடைவிதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. மேலும் இந்த மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Next Story