மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம் - தேவேந்திர பட்னாவிஸ்


மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம் - தேவேந்திர பட்னாவிஸ்
x

மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

ஊழல் பானை

மும்பையில் நேற்று முன்தினம் 'தஹி ஹண்டி' என அழைக்கப்படும் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. கோவிந்தாக்கள் வான் உயரத்திற்கு மனித பிரமிடு அமைத்து அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த தயிர் பானைகளை உடைத்தனர். இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒர்லி பகுதியில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் ஏற்பாடு செய்து இருந்த விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பட்னாவிஸ் பேசுகையில், "பிரதமர் மோடி ஊழல் பானைகளை உடைக்க தொடங்கி உள்ளார். நாங்களும் மும்பை மாநகராட்சியின் ஊழல் பானையை உடைப்போம்" என்றார்.

தாமரை மலரும்

இதேபோல ஒர்லியில் நடந்த தஹி ஹண்டி விழாவில் ஆஷிஸ் செலார் பேசுகையில், " இந்து பண்டிகைகள் கொண்டாட அனைத்து கட்டுபாடுகளையும் நீக்கியதற்காக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும் நன்றி. ஒர்லியில் மட்டுமல்ல, மும்பையின் பல்வேறு பகுதிகளில் சிவசேனா, பா.ஜனதா ஆதரவால் தான் வெற்றி பெற்றது. இந்த முறை மும்பை மாநகராட்சியில் பா.ஜனதாவின் தாமரை மலரும் " என்றார்.

மும்பை மாநகராட்சி கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனா வசம் உள்ளது. தற்போது சிவசேனா மிகப்பெரிய பிளவை சந்தித்து இருப்பதால், சிவசேனாவிடம் இருந்து மும்பை மாநகராட்சியை வசப்படுத்த பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.


Next Story