விவசாயிகள் போராட்டம்: அரியானாவில் இணைய சேவை துண்டிப்பு


விவசாயிகள் போராட்டம்: அரியானாவில் இணைய சேவை துண்டிப்பு
x

Image Courtacy: ANI

அரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், 7 மாவட்டங்களில் இணையசேவையை மாநில அரசு துண்டித்துள்ளது.

சண்டிகர்,

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசை ஏற்க வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சார், கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இவர்கள் டெல்லியில் மிகப்பெரிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை பிப்ரவரி 13ம் தேதி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் நாளை முதல் அரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். இத்தகைய சூழலில் தான் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி நாளை காலை 6 மணி முதல் வரும் 13ம் தேதி இரவு 11.59 மணி வரை அரியானாவில் 7 மாநிலங்களில் இணைய சேவையை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சர் ஆகிய மாவட்டங்களில் வரும் 13ம் தேதிவரை இணைய சேவை துண்டிக்கப்பட உள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்) போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில், மொபைல் போன்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தவறான தகவல், வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாக சேர்வதை தடுப்பதற்கும் இணைய சேவைகளை நிறுத்தி வைப்பதாக உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும் அரியானாவில் பல இடங்களில் விவசாயிகளின் ஊர்வலத்தை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர்.


Next Story