பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில், பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் கைது; போலீசாருடன் தள்ளு முள்ளு-பரபரப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில், பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் கைது; போலீசாருடன் தள்ளு முள்ளு-பரபரப்பு
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து விதான சவுதா நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

பெங்களூரு:

விதான சவுதா நோக்கி...

கர்நாடக மாநில விவசாயிகள் நேற்று பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து விதான சவுதா வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். மாநில விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில் தமிழகம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். பேரணியை முன்னிட்டு 695 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேரணி தொடங்குவதற்கு முன்பு விவசாயிகள் கூறுகையில், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதாக கூறினர்.

கோரிக்கைகள்

மேலும், விவசாய உபரகணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். குறிப்பிட்ட விவசாய பயிர்களுக்கு மட்டும் வழங்கப்படும் காப்பீட்டு தொகையை அனைத்து பயிர்களுக்கும் வழங்க வேண்டும்.

கனமழையால் சேதமடைந்த பயிர்கள், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 500 ஆக நிர்ணயிக்க வேண்டும். விவசாயத்திற்கு கூடுதல் கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

இதையடுத்து அவர்கள் பேரணியாக விதான சதவுா நோக்கி புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், பேரணி நடத்துவதை கைவிட வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து அங்கு நிறுத்தி இருந்த 15 பஸ்களில் ஏற்றினர்.

இதற்கிடையே அவர்கள் கூறுகையில், 'ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. அவரை அவமதிப்பது எங்கள் திட்டமல்ல. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். விவசாயிகள் மீது நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு, தகுந்த எதிர்வினையை வெளிப்படுத்துவோம்' என்றனர்.


Next Story