காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: மண்டியாவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்


காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: மண்டியாவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளதால் மண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் அணைகள் எதுவும் நிரம்பவில்லை. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை படி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதியில் இருந்து கடந்த 7-ந்தேதி வரை 9 நாட்கள் சராசரியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் மண்டியாவில் 9 நாட்களாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் 8-ந்தேதி தண்ணீர் திறப்பை கர்நாடக அரசு நிறுத்தியது.

ஆனாலும் தமிழக அரசு மேலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வந்தது. கர்நாடக அரசு தங்களிடம் தண்ணீர் இல்லை என்றும், குடிநீருக்கே போதாத நிலையில் எவ்வாறு தண்ணீர் திறக்க முடியும் என்று கூறியது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் கர்நாடக அரசு, காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பை சுட்டிக்காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரை கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாய சங்கத்தினர் நேற்று மாலை பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை நடுவே டயர்களை கொளுத்திப்போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் அவர்கள் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அப்போது விவசாயிகள், எக்காரணம் கொண்டும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்றும் கோஷம் எழுப்பினர்.

இதேபோல், ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அவா்கள், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், கர்நாடக விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.ஆர்.எஸ். அணையில் நீர்மட்டம் ெவகுவாக குறைந்துவிட்டது. அணையில் உள்ள தண்ணீர் குடிநீருக்கே போதுமானதாக இல்லை. இதனை காவிரி ஒழுங்காற்று குழு கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக விவசாயிகள் மற்றும் மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் காவிரியில் தண்ணீர் திறக்க பரிந்துரை செய்திருப்பது நியாயமல்ல. கர்நாடக விவசாயிகளின் நலனை பாதுகாக்க மாநில அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தெரியாமல் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் அது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றனர்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பதால் மண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.


Next Story