பெங்களூரு மாநகராட்சி தீ விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம்- தினேஷ் குண்டுராவ்


பெங்களூரு மாநகராட்சி தீ விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம்- தினேஷ் குண்டுராவ்
x
தினத்தந்தி 12 Aug 2023 6:45 PM GMT (Updated: 12 Aug 2023 6:46 PM GMT)

பெங்களூரு மாநகராட்சியில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சியில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விசாரணை நடத்துவது அவசியம்

பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தீ விபத்து நடந்து என்ஜினீயர்கள் உள்பட ஊழியர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த தீ விபத்து திட்டமிட்டு நடந்திருப்பதாக கூற விரும்பவில்லை. ஆனாலும் தீ விபத்து நடந்த பின்பு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. எனவே தான் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

இதற்கு முன்பு கூட மாநகராட்சி அலுவலகங்களில் ஆவணங்களுக்கு தீவைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் பெயரில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தவறு செய்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

பணியை முடித்தவர்களுக்கு...

பெங்களூரு மாநகராட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் வருகின்றன. இதனை சரி செய்யும் வேலைகளில் தான் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஈடுபட்டுள்ளார். ஏனெனில் யார் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர், யாரெல்லாம் பணிகளை மேற்கொள்ளாமல் பணம் வாங்கி வந்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஒப்பந்தப்படி பணிகளை முடித்தவர்களுக்கு பணத்தை விடுவித்தே தீருவோம். அதே நேரத்தில் பணிகளை முடிக்காமல் இருப்பவர்களுக்கு எப்படி பணத்தை விடுவிக்க முடியும்.

எந்த ஒப்பந்ததாரர் என்ன பணிகளை செய்திருக்கிறார் என்ற தகவல்கள் மாநகராட்சியில் இருக்க வேண்டும். இதுபற்றியெல்லாம் விசாரணை நடத்துவதற்காக தான் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசுக்கு இடையிலான பிரச்சினை இல்லை. அதுபோன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. உண்மையை சொல்ல போனால் மாநகராட்சியில் நடைபெற்ற தவறுகளை சரி செய்வதற்கான வேலை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story