ரூ.1.5 லட்சம் கடன்: 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை


ரூ.1.5 லட்சம் கடன்: 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 27 Nov 2023 12:05 PM IST (Updated: 27 Nov 2023 12:20 PM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்வதற்கு முன் செல்போனில் வீடியோ பதிவு செய்து அதை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சதாசிவா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரிப் சாப்(36 வயது). இவரது மனைவி சுமையா(32 வயது).

இந்த தம்பதிக்கு ஹசிரா(14 வயது), முகமது சுபன்(10 வயது), முகமது முனீர்(8 வயது) ஆகிய 3 பிள்ளைகள் இருந்தனர்.

உணவகம் நடத்தி வந்த கரிப் சாப்பின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது வீட்டின் கீழ்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்துவரும் நபரிடம் கடன் வாங்கியுள்ளார். அதேபோல், தனக்கு தெரிந்தவர்களிடமும் அவர் கடன் வாங்கியுள்ளார். கரிப் சாப் ஒட்டுமொத்தமாக 1.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படவே வாங்கிய கடனையும், கடனுக்கான வட்டியையும் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால், கரிப்பிற்கு கடன் கொடுத்தவர்கள் அவரின் வீட்டிற்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். குறிப்பாக, கரிப்பின் வீட்டிற்கு கீழ்ப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர், தான் கொடுத்த கடன் தொகையை திருப்பித்தரும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், கரிப் சாப் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், மிகுந்த மனஉளைச்சல் அடைந்த கரிப் சாப் தனது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு மனைவியுடன் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக, தனக்கு கடன் வழங்கிய கீழ் வீட்டில் வசிக்கும் நபர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மிகவும் தொல்லை தருவதாகவும், அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் செல்போனில் வீடியோ பதிவு செய்த கரிப் சாப் அதை தன் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், தனது வீட்டிற்கு 3 மாதங்களாக வாடகை கொடுக்க முடியவில்லை என்று கூறிய கரிப் சாப், வீட்டிற்கு கொடுத்த முன்பணத்தை தன் பாட்டியிடம் கொடுத்துவிடும்படி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்த்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், கரிப் சாப்பின் வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்கு முன்பு, கரிப் தனது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கரிப்பின் வீட்டிற்கு சென்ற போலீசார் 5 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ. 1.5 லட்சம் கடனால் குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story