பழைய இரட்டை என்ஜினை மறந்து விடுங்கள்; சந்தையில் புதிய என்ஜின் வந்துள்ளது: குஜராத்தில் கெஜ்ரிவால் பிரசாரம்


பழைய இரட்டை என்ஜினை மறந்து விடுங்கள்; சந்தையில் புதிய என்ஜின் வந்துள்ளது:  குஜராத்தில் கெஜ்ரிவால் பிரசாரம்
x

குஜராத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், பழைய இரட்டை என்ஜினை மறந்து விடுங்கள் என்றும் சந்தையில் புதிய என்ஜின் வந்துள்ளது என்றும் பேசியுள்ளார்.



கம்பாலியா,


குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, அடுத்து குஜராத்திலும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ளது. இதனால், அக்கட்சி காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குஜராத்தின் கம்பாலியா நகரில் நடந்த பேரணி ஒன்றில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, இரட்டை என்ஜின் அரசை உருவாக்க ஆதரவு கொடுங்கள் என பா.ஜ.க. கேட்டு வருகிறது. நீங்கள் இரட்டை என்ஜினை மறந்து விடுங்கள். சந்தையில் புதிய என்ஜின் ஒன்று வந்துள்ளது என அவர் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சூரத் நகரில் நடைபெறும் பொது பேரணி ஒன்றில் இரவு 7 மணியளவில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.


Next Story