பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங் காங்கிரசில் இணைந்தார்

பிரேந்தர் சிங்கின் மகன் பிரிஜேந்தர் ஒரு மாதத்துக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடைய மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரேம லதாவும் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இதையடுத்து இருவரும் காங்கிரசில் இணைய உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரேந்தர் சிங் தனது மனைவியுடன் காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் பூபிந்தர் சிங் முன்னிலையில் பிரேந்தர் சிங் அக்கட்சியில் இணைந்தார். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரேந்தர் சிங், 10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் சேர்ந்தார். அவருடைய மகன் பிரிஜேந்தர் சிங் ஒரு மாதத்துக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசில் இணைந்த பிறகு பிரேந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நான் காங்கிரசை விட்டு வெளியேறியபோது, பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் சித்தாந்தங்களில் பெரிய வித்தியாசம் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிதான் இந்திய கட்சி, தேசத்தின் அடிப்படைகளைப் பாதுகாப்பதே அதன் பொறுப்பு. "
இவ்வாறு அவர் கூறினார்.






