ரூ.200 கோடி மோசடி வழக்கு: சுகேஷ்சந்திரசேகரை சிறையில் சந்தித்த 4 நடிகைகள்..!!


ரூ.200 கோடி மோசடி வழக்கு: சுகேஷ்சந்திரசேகரை சிறையில் சந்தித்த 4 நடிகைகள்..!!
x

கோப்புப்படம்

சுகேஷ்சந்திரசேகரை சிறையில் 4 நடிகைகள் சந்தித்ததாகவும், அவர்களுக்கு பல லட்சம் ரூபாயை அவர் கொடுத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன.

டெல்லி திகார் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போது மற்றொரு மோசடி வழக்கிலும் சிக்கினார்.

தொழில் அதிபர் ஒருவருக்கு ஜாமீன் எடுத்து தருவதாகக்கூறி, தொழில் அதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியபால், சுகேசின் உதவியாளர் பிங்கி இரானி உள்ளிட்டோரும் கைதாகினர்.

மோசடி பணத்தில், சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக கண்டறியப்பட்டது. பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பல நடிகைகளுடன் தன் உதவியாளர் பிங்கி இரானி மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்காக நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார்.

அவர் செய்த குற்றங்கள் தொடர்பாக அமலாக்க பிரிவு அதிகாரிகளும், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். டெல்லி போலீசார் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன் அடிப்படையில் ஜாக்குலின் பெர்னாண்டசிடம் நேற்று முன்தினம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதைப்போல பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் 2 பேரின் வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.

இதனால் பிங்கி இரானியை போலீசார் நேற்றும் விசாரணைக்கு அழைத்தனர். ஜாக்குலின் பெர்னாண்டசை தேவைப்பட்டால் அழைப்பதாகவும், அதுவரை டெல்லியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று பிங்கி இரானியிடம் மட்டுமின்றி, வழக்கில் தொடர்புடைய மற்றொரு நடிகையான நோரா பதேகியிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. தனித்தனியாகவும், இருவரையும் ஒன்றாக வைத்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து உள்ளனர்.

அப்போது சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்செயல்கள் அதுகுறித்த பதிவுகள் எதுவும் தனக்கு தெரியாது என நோரா பதேகி கூறியுள்ளார். இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 4 நடிகைகள்

இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, டெல்லி போலீசாருக்கு விசாரணையை இலகுவாக்கி உள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகிய மேலும் 4 நடிகைகள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் சுகேஷ் சந்திரசேகரை பற்றி பிங்கி இரானி ஒவ்வொரு விதமாக கூறியிருக்கிறார். நிகிதா தம்போலியிடம் 'தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர், அவரது பெயர் சேகர்' என்றும், சோபியா சிங்கிடம் சினிமா தயாரிப்பாளர் சேகர் ரெட்டி என்றும், அருஷாவிடம் வேறு பெயரையும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சரின் உறவினர்

சாகத் கன்னாவை பிங்கி இரானி தொடர்பு கொண்டபோது சுகேஷ் சந்திரசேகரை சாகத் கன்னா, 'கூகுளில்' தேடியிருக்கிறார். அதில் சுகேசின் மோசடி விவரங்கள் வந்துள்ளன.

இதுபற்றி கேட்டபோது 'அது அவர் இல்லை, அவரது பெயர் சுகேஷ் சந்திரசேகர ரெட்டி' என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர் சாகத் கன்னா, சுகேஷ் சந்திரசேகருடன் பழகும்போது, சுகேஷ் சந்திரசேகர் தன்னை தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஒருவரின் உறவினர் என்று சொல்லியிருக்கிறார். இந்த தகவல்கள் எல்லாம் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ளன.

பல லட்சம் பணம்

இந்த நடிகைகளை பிங்கி இரானி, திகார் சிறைக்கு அழைத்து சென்று சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்பிறகு அவர்கள் தனியாகவே சுகேஷ் சந்திரசேகரை சிறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பல லட்சம் ரூபாயை சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து அவர்கள் பெற்றதாகவும், இதில் பிங்கி இரானியும் ஆதாயம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனால் மேற்கண்ட 4 நடிகைகளிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story