தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள்: தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்


தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள்: தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 3 Feb 2024 1:07 PM GMT (Updated: 3 Feb 2024 2:23 PM GMT)

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெங்களூரு,

மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகளை கொடுப்பதன் மூலமாகவும், உத்தரவாத அட்டையை கொடுப்பதன் மூலமாகவும் தேர்தலின் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அறிவிப்பதால் உண்மையான மக்களின் மனநிலை மாறக்கூடும். தேர்தல் விதிமுறைகளை மீறி உத்தரவாதங்களை பயன்படுத்தி மக்களை கவர்ந்து இழுக்கும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இந்த நடைமுறை உள்ளது. எனவே இதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபங்களை பதிவுசெய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய சட்டத்துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு அனுப்பிய இந்த நோட்டீஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story