புதிய புகார்கள் வெளியாகி இருக்கும் விவகாரம்: அதானி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி பறித்து உள்ளது?காங்கிரஸ் குற்றச்சாட்டு


புதிய புகார்கள் வெளியாகி இருக்கும் விவகாரம்: அதானி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி பறித்து உள்ளது?காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2023 10:15 PM GMT (Updated: 13 Oct 2023 10:16 PM GMT)

அதானி நிறுவனம் மீது வெளியாகி இருக்கும் புதிய புகார்களை பார்க்கும்போது, அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு பறித்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

அதானி நிறுவனம் மீது வெளியாகி இருக்கும் புதிய புகார்களை பார்க்கும்போது, அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு பறித்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான அதானியின் நிறுவனங்கள் மீது அடுத்தடுத்து மோசடி குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் அதானி நிறுவனம் மீது மேலும் புதிய புகார்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது அதானி நிலக்கரி நிறுவனங்கள் சந்தை விலையை விட பல மடங்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

குறிப்பாக கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் அதானி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இறக்குமதி விலைகள் ஏற்றுமதி அறிவிப்புகளை விட மிக அதிகமாக இருந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சந்தை விலையை விட பல மடங்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்ததன் மூலம் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து, அதன் மூலம் லட்சக்கணக்கான நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரத்துக்கு அதிக கட்டணம் செலுத்த வழிவகுத்து உள்ளது.

அதானி நிறுவனம் மீதான இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக பிரதமர் மோடியை மீண்டும் குறைகூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதானி நிறுவனம் மீதான இந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு உருவக கொள்ளை அல்ல. மாறாக கோடிக்கணக்கான இந்தியர்களின் பாக்கெட்டில் நடந்த உண்மையான திருட்டு.

அதானி நிறுவனம் நிலக்கரி வர்த்தகம் போன்ற குறைந்த அளவு வணிகத்தில் கூட 52 சதவீத லாபம் ஈட்டியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு பறித்து இருக்கலாம்.

நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் இது. பேராசை மற்றும் இதயமற்ற தன்மையால் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 'நிர்வகிக்க' முடியாத மோசடி எதுவும் இல்லை, திசைதிருப்ப முடியாத எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

ஆனால் அரசர் (மோடி) தவறாக நினைக்கிறார். 'மோதானி'யால் இந்தியா கைப்பற்றப்படாது. 2024-ல் இந்திய மக்கள் பதில் சொல்வார்கள்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


Next Story