ஜி-20 கூட்டம்; சொந்த வாகனம், பஸ்... மந்திரிகளுக்கு பறந்த உத்தரவு
டெல்லியில் மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசும்போது, ஜி-20 கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டவர் தவிர வேறு மந்திரி எவரும் பேச கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி ஜி-20 தலைமையை இந்தியா பெற்றதும், நாடு முழுவதும் 60 நகரங்களில் ஜி-20 தொடர்புடைய 200 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. கூட்டத்தில் வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று பேசினார். அப்போது பல அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். அவர் பேசும்போது, ஜி-20 கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டவர் தவிர வேறு மந்திரி யாரும் பேச கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.
இதேபோன்று, செப்டம்பர் 9-ந்தேதி இரவு விருந்தில் கலந்து கொள்ளும் மந்திரிகள் நாடாளுமன்ற இல்ல வளாகத்திற்கு தங்களுடைய சொந்த வாகனங்களிலேயே வரவேண்டும். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பஸ்சிலேயே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.