நாங்கள் ஆட்சியை பிடித்தால்... கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு விற்கப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி


நாங்கள் ஆட்சியை பிடித்தால்... கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு விற்கப்படும்:  காங்கிரஸ் வாக்குறுதி
x

நாட்டின் மொத்த சொத்தில் 3 சதவீதம் மட்டுமே வைத்துள்ள ஏழைகளிடம் இருந்து தற்போது, நாட்டுக்கு 50 சதவீத ஜி.எஸ்.டி. வருவாய் கிடைக்கிறது என கவுரவ் வல்லப் கூறியுள்ளார்.



புதுடெல்லி,


நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.50 உயர்ந்து, மொத்த விலை ரூ.1,100 ஆக உள்ளது. வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலையும் இன்று ரூ.350 உயர்த்தப்பட்டு உள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளரான பேராசிரியர் கவுரவ் வல்லப் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நாங்கள் ஓர் உறுதிமொழியை எடுத்திருக்கிறோம்.

இதன்படி, 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.500க்கு விற்பனை செய்யப்படும். அதற்கு மேல் விலை அதிகரிக்க காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது.

ரூ.500க்கு மேல் உள்ள எந்தவொரு விலையும் பணவீக்கம் மற்றும் ஜி.டி.பி. வளர்ச்சிக்கு தீங்கு ஏற்படுத்தும் என கூறியுள்ளார். ரூ.500 விலையில் சிலிண்டர் தருவதற்கு எடுத்துக்காட்டாக ராஜஸ்தானை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் ஏழை குடும்பத்தினருக்கு ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500 என்ற மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டார்.

ராஜஸ்தானில் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை தற்போது, ரூ.1,050 ஆக உள்ள நிலையில், உஜ்வாலா திட்ட பயனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு மானிய விலையிலான இந்த ரூ.500க்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

இந்த நடைமுறை வருகிற ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்துடன் சேர்த்து, ஏழை மக்களுக்கு தேவையான சமையலறை உபகரணங்களையும் வழங்க மாநில அரசு ஒரு செயல் திட்டம் தயார் செய்து வைத்திருக்கிறது என கெலாட் மகிழ்ச்சியான செய்தியை கூறினார்.

இதுபற்றி வல்லப் கூறும்போது, சிலிண்டர் விலை உயர்வால், பணக்காரர்களாக உள்ள தனது நண்பர்களை இன்னும் பெரிய பணக்காரர்களாக மாற்ற உதவும் வகையில் மத்திய அரசு முன்னுரிமை அளிப்பது தெரிகிறது. ஆனால், மக்களுக்கான ஆதரவு நிலை பற்றியே காங்கிரஸ் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது என கூறியுள்ளார்.

கடந்த 6 மாதங்களில் 40 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் வகையிலான நடவடிக்கையை மோடி அரசு எடுக்கவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த சொத்தில் 3 சதவீதம் மட்டுமே வைத்துள்ள ஏழைகளிடம் இருந்து தற்போது, நாட்டுக்கு 50 சதவீத ஜி.எஸ்.டி. வருவாய் கிடைக்கிறது என வல்லப் கூறியுள்ளார்.


Next Story