பிரதமர் மோடி குறித்து கூகுள் ஏ.ஐ. சார்புத்தன்மையுடன் பதிலளிக்கிறது - மத்திய அரசு குற்றச்சாட்டு


பிரதமர் மோடி குறித்து கூகுள் ஏ.ஐ. சார்புத்தன்மையுடன் பதிலளிக்கிறது - மத்திய அரசு குற்றச்சாட்டு
x

சர்வதேச தலைவர்களின் சர்வாதிகார தன்மை குறித்த கேள்விக்கு கூகுள் ஏ.ஐ. கருவியான ‘ஜெமினி’ பதிலளித்துள்ளது.

புதுடெல்லி,

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) கருவியான 'ஜெமினி', பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு சார்புத்தன்மையுடன் பதிலளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட சர்வதேச தலைவர்களின் சர்வாதிகார தன்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 'ஜெமினி' ஏ.ஐ. கருவி பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில் பிரதமர் மோடி குறித்து ஒரு விதமாகவும், மற்ற தலைவர்கள் குறித்து வேறு விதமாகவும் 'ஜெமினி' ஏ.ஐ. கருவி பதிலளிப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக 'எக்ஸ்' வலைதளத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மற்றும் பிற சர்வதேச தலைவர்கள் குறித்து 'ஜெமினி' ஏ.ஐ. கருவி அளித்த பதில்களின் ஸ்கீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் இடைநிலை விதி பிரிவு 3(1) (பி)-ன் படி, இது நேரடி விதிமீறல் ஆகும். மேலும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளை இது மீறுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேல் நடவடிக்கைக்காக தனது பதிவில் கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தை அவர் டேக் செய்துள்ளார்.



Next Story