கூட்டாட்சி தத்துவத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் - பிரதமர் மோடி


கூட்டாட்சி தத்துவத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் - பிரதமர் மோடி
x

மாநிலங்கள் வளரும்போது நாடு வளரும் என்று கேரளாவில் ரூ.3,200 கோடி திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி வருகை

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கேரளாவுக்கு வந்தார். பா.ஜ.க. இளைஞர் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், கிறிஸ்தவ பேராயர்களையும் சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியை முடித்ததும் இரவில் கொச்சியில் உள்ள தாஜ் மலபார் ஓட்டலில் தங்கினார்.

வந்தே பாரத் ரெயில் சேவை

2-வது நாளான நேற்று காலை கொச்சியில் இருந்து விமானப்படை தனி விமானம் மூலம் மோடி திருவனந்தபுரம் வந்தார். அங்கு அவரை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். நேற்றைய நிகழ்ச்சியிலும் பிரதமர் வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்தார்.

சரியாக காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து திருவனந்தபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள சென்டிரல் ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் அவர் பங்கேற்று மத்திய அரசு சார்பில் கேரளாவில் செயல்படுத்த உள்ள ரூ.3,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார்.

திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் பாதை

இதுபோக கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டம், கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு இடையே பணி நிறைவடைந்த மின்சார ரெயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மலையாளத்தில் பேசிய மோடி

விழாவில் பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கும்போது, 'மலையாளி சினேகிதரே' என மலையாளத்தில் பேச்சை தொடங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் உலகளாவிய நலத்திட்டங்களால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பயன் அடைந்துள்ளனர். கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டம் உள்பட பெரும்பாலான பொது போக்குவரத்து சேவை உள்நாட்டிலேயே தயாரானவை.

மாநிலங்கள் வளர்ச்சி

கொச்சி நீர்வழி மெட்ரோ, டிஜிட்டல் பார்க் போன்ற திட்டங்களால், மற்ற மாநிலங்களுக்கு கேரளா முன் மாதிரியாக உள்ளது. கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் எளிமையாக்கும். தொழில்நுட்ப துறையில் 'டிஜிட்டல் பார்க்' சிறந்த பங்களிப்பை கொடுக்கும்.

நாட்டின் வளர்ச்சியை உலகம் அங்கீகரித்து உள்ளது. மாநிலங்களின் வளர்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். மாநிலங்கள் வளரும்போது நாடும் வளரும். அதற்காகவே அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கல்வியறிவு, கடின உழைப்பு, அறிவுத்திறன் நிறைந்த மாநிலமான கேரளாவின் வளர்ச்சியுடன் மத்திய அரசு இணைந்து செயலாற்றும். கடந்த கால அரசுடன் ஒப்பிடுகையில் ரெயில்வே துறை 5 மடங்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.

கூட்டாட்சிக்கு முக்கியத்துவம்

வலிமையான மத்திய அரசால், இந்தியா மீதான நம்பிக்கைக்கு உற்சாகம் கிடைக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கேரளா வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி பெறும்.

கேரளாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை வந்தே பாரத் ரெயில் இணைக்கிறது. போக்குவரத்தை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டம் உள்ளிட்ட பெரும்பாலான போக்குவரத்து திட்டங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இளைஞர்களின் தனித்திறன் வளர்ச்சியில் மத்திய அரசு முதலீடு செய்கிறது. உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓவியம் பரிசு

வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவையொட்டி 9 பள்ளிகளை சேர்ந்த சுமார் 600 மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஓவியம், கதை, கவிதை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அந்த மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தாங்கள் வரைந்த வந்தே பாரத் ரெயில் ஓவியங்களை பிரதமரிடம் காண்பித்து மகிழ்ந்தனர். அவர்களை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் தாங்கள் வரைந்த ஓவியங்களை மாணவர்கள் மோடிக்கு பரிசாக வழங்கினர்.

விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா முடிவடைந்ததும் பிரதமர் மோடி பகல் 12.45 மணிக்கு விமானம் மூலம் சூரத் புறப்பட்டு சென்றார்.


Next Story