22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை..!!
சத்தீஷ்காரில் மகாதேவ் சூதாட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5.39 கோடி சமீபத்தில் அமலாக்கத்துறையிடம் சிக்கியது
புதுடெல்லி,
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நாளை மற்றும் 17-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன . பாஜகவைப் பொறுத்தவரையில் கணிசமான இடங்களைப் பெற்றாலும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
இந்த சூழலில் ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து உள்ளது. குறிப்பாக மகாதேவ் என்ற சூதாட்ட செயலி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக சத்தீஷ்காரில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளும் நடத்தி இருக்கிறது.
இந்த மோசடிகளை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மத்திய அரசுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று மகாதேவ் செயலி உள்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்து உள்ளது. இதற்கான உத்தரவை வெளியிட்டு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.
சத்தீஷ்காரில் மகாதேவ் சூதாட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5.39 கோடி சமீபத்தில் அமலாக்கத்துறையிடம் சிக்கியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு தேர்தல் செலவுக்கு வழங்க இருந்ததாக தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.