கர்நாடகத்தின் 5-வது முதல்-மந்திரி பி.டி.ஜாட்டி


கர்நாடகத்தின் 5-வது முதல்-மந்திரி பி.டி.ஜாட்டி
x

கர்நாடகத்தின் 5-வது முதல்-மந்திரி என்ற பெருமைக்கு உரியவர் பி.டி.ஜாட்டி ஆவார்.

பெங்களூரு:

கர்நாடகத்தின் 5-வது முதல்-மந்திரி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பசப்பா தனப்பா ஜாட்டி (பி.டி.ஜாட்டி). இவர் கர்நாடகத்தில் 1958-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி முதல் 1962-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி வரை 3 ஆண்டுகள் 302 நாட்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். பீஜாப்பூர் மாவட்டம் (தற்போது விஜயாப்புரா) ஜமகண்டி தாலுகா சவல்கியில் 1912-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி பி.டி.ஜாட்டி பிறந்தார். பீஜாப்பூரில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பி.டி.ஜாட்டி, மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் சட்டப்படிப்பை முடித்தார்.

ஆரம்பத்தில் வக்கீலாக பணியாற்றிய இவர், அரசியல் மீது கொண்டுள்ள பற்று காரணமாக கடந்த 1940-ம் ஆண்டு நகரசபையில் உறுப்பினராக வெற்றி பெற்றார். பின்னர் 1945-ம் ஆண்டு நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜமகண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 1958-ம் ஆண்டு கர்நாடகத்தின் 5-வது முதல்-மந்திரியாக பி.டி.ஜாட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, நில சீர்திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து பி.டி.ஜாட்டி 1968 முதல் 1972-ம் ஆண்டு வரை புதுச்சேரியின் கவர்னராகவும், 1972-ம் ஆண்டு ஒடிசாவின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டார். 1974-ம் ஆண்டு கவர்னர் பதவியை ராஜினாமா செய்த பி.டி.ஜாட்டி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹோரோவை வீழ்த்தி 1974-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி இந்தியாவின் 5-வது துணை ஜனாதிபதியாக பதியேற்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமது இறந்ததை தொடர்ந்து 1977-ம் ஆண்டு 11-ந்தேதி முதல் ஜூலை 25-ந்தேதி வரை பொறுப்பு ஜனாதிபதியாக பி.டி.ஜாட்டி பதவி வகித்தார்.

1977-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி மந்திரிசபை பரிந்துரையின்பேரில் அவசர நிலையை ரத்து செய்தார். 1977-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, புதிய மந்திரிசபை, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அரசுகளை கலைக்க பரிந்துரை செய்தது. மந்திரிசபையின் பரிந்துரையை முதலில் ஏற்க மறுத்த பி.டிஜாட்டி, ஒருநாள் கழித்து அதனை ஒப்புகொண்டு 9 மாநிலங்களில் உள்ள அரசை டிஸ்மிஸ் செய்தார்.

தன்னலமற்ற சேவைக்கு முன்மாதிரியாக விளங்கிய பி.டி.ஜாட்டி கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்தார். அவர் 'நான் எனது சொந்த மாதிரி' என்ற சுயசரிதை எழுதி இருந்தார்.


Next Story