குஜராத்தில் பாஜக அமோக வெற்றி: 12-ம்தேதி பூபேந்திர பட்டேல் பதவி ஏற்பு...!


குஜராத்தில் பாஜக அமோக வெற்றி: 12-ம்தேதி பூபேந்திர பட்டேல் பதவி ஏற்பு...!
x
தினத்தந்தி 8 Dec 2022 3:13 PM GMT (Updated: 8 Dec 2022 3:28 PM GMT)

குஜராத் சட்டசபை தேர்தலில் 153 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று 2-வது முறையாக முதல்-மந்திரியாக பூபேந்திர பட்டேல் பதவியேற்க இருக்கிறார்.

ஆமதாபாத்,

நாட்டில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், பா.ஜ.க. பெரும்பான்மைக்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

குஜராத்தில் கடந்த சில வாரங்களாக தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது. மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., இந்த முறையும் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியை தொடர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்காக பிரதமர் மோடி தலைமையில், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. முதல்-மந்திரிகள் என கட்சியின் மூத்த தலைவர்கள் மாநிலத்தில் சூறாவளி பிரசாரங்கள் மேற்கொண்டனர்.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியும், குஜராத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியை வேகப்படுத்தியது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் என கட்சியின் மூத்த தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

குஜராத்தில் இந்த முறை புதிய வரவான ஆம் ஆத்மியும் மாநிலத்தில் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

இந்த கட்சிகள் உள்பட சுமார் 70 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 624 சுயேச்சைகள் என 1,621 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலத்தின் 182 உறுப்பினர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

அந்த வகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இதில் முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகளும் எண்ணப்பட்டன.

மாநிலத்தில் ஆட்சியமைக்க 92 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், பா.ஜ.க. தொடக்கம் முதலே அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது.

இதன்படி, இரவு 8.30 மணியளவில் பா.ஜ.க. 154 இடங்களில் வெற்றி பெற்றும், 2 இடங்களில் முன்னிலையும் பெற்றிருந்தது. காங்கிரிஸ் கட்சி 17 இடங்களை கைப்பற்றி உள்ளது. புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 12.82 சதவீத வாக்குகளை பெற்று வளர்ந்து வரும் கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சி ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 180 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 2 இடங்களில் ஆளும் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.

இவற்றில், 154 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால், தனிப்பெரும் கட்சியாக, குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

அக்கட்சியின் முதல்-மந்திரியாக உள்ள பூபேந்திர பட்டேல் 2-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி மாநிலத்தின் 17-வது முதல்-மந்திரியாக பட்டேல் பொறுப்பேற்றார்.

நடப்பு தேர்தலிலும், கத்லோடியா தொகுதியில் இருந்து போட்டியிட்ட பட்டேல் 1.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளார். இது பட்டேலின் தலைமையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளது.


Next Story