குஜராத் தேர்தல்: 'அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் தலா ரூ. 5-க்கு 3 வேளையும் உணவு - பாஜக தேர்தல் அறிக்கை


குஜராத் தேர்தல்: அன்னபூர்ணா உணவகம் என்ற பெயரில் தலா ரூ. 5-க்கு 3 வேளையும் உணவு - பாஜக தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2022 3:50 PM GMT (Updated: 26 Nov 2022 4:08 PM GMT)

'அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் தலா 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காந்திநகர்,

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதேபோல், தேர்தல் அறிக்கைகளையும் அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:-

நாட்டுக்கு எதிராக செயல்படும் குழுக்கள், தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகள், நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை கண்டறிந்து அழிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்படும்.

குஜராத்தில் பொதுசிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்.

ரூ. 10 ஆயிரம் கோடியில் விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களை கண்டறிந்து அழிக்க பயங்கரவாத தடுப்பு அமைப்பு உருவாக்கப்படும்

அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு 1 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும்.

குஜராத்தில் மூத்த குடிமக்களுக்கு (பெண்கள் மட்டும்) இலவச பஸ் பயண வசதி வழங்கப்படும்

பெண் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி முதல் முதுகலை வரை பயில இலவச கல்வி வழங்கப்படும்

குஜராத் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும்

இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) போன்று குஜராத் தொழில்நுட்ப கழகம் உருவாக்கப்படும்.

'அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் மாநிலத்தில் 100 இடங்களில் உணவகம் உருவாக்கப்படும். இந்த உணவகத்தில் தலா 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும்' உள்பட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.


Next Story