நூ வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிரடி கைது


நூ வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிரடி கைது
x
தினத்தந்தி 15 Sept 2023 8:36 AM IST (Updated: 15 Sept 2023 10:49 AM IST)
t-max-icont-min-icon

நூ மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ந்தேதி இந்து மத அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் பேரணி நடத்தியது. பேரணி இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் சென்றபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியதால் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனிடையே, இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வன்முறையில் பெரோஷ்பூர் ஜஹிர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மமன் கான் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நூ மாவட்ட வன்முறைக்கு எம்.எல்.ஏ. மமன் கானும் முக்கிய காரணம் என போலீசார் குற்றஞ்சாட்டினர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மமன் கானுக்கு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார்.

அதேவேளை, வன்முறை வழக்கில் தன் பெயர் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும், தன்னை போலீசார் கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரியானா ஐகோர்ட்டில் மமன் கான் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு அடுத்த மாதம் 19ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், நூ வன்முறை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மமன் கானை போலீசார் நேற்று கைது செய்தனர். நூ வன்முறையில் எம்.எல்.ஏ. மமன் கானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யபப்ட்ட எம்.எல்.ஏ. கான் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நூ வன்முறை சம்பவத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story