விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு


விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு
x

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி,

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை, போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுவரும் டெல்லி - அரியானா எல்லைப்பகுதியான ஷம்புவில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அரியானா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஹிராலாலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஹிராலால் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவரின் உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அவரை மீட்ட சக போலீசார் அம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹிராலாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story