நாங்கள் இதுவரை சந்தித்ததில் கடினமான தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல்தான் - அரவிந்த் கெஜ்ரிவால்


நாங்கள் இதுவரை சந்தித்ததில் கடினமான தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல்தான் - அரவிந்த் கெஜ்ரிவால்
x

நாங்கள் இதுவரை சந்தித்த தேர்தல்களில் கடினமானது, டெல்லி மாநகராட்சி தேர்தல்தான் என கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லி மாநகராட்சி தேர்தல்

டெல்லியில் ஒருங்கிணைந்த மாநகராட்சியின் 250 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்தக் கட்சிக்கு 134 இடங்கள் கிடைத்துள்ளது. பா.ஜ.க.வுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. டெல்லி மாநகராட்சி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வசம் சென்றுள்ளது.

கடினமான தேர்தல்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மத்தியில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி மாநகராட்சி தேர்தல் மிக மிக கடினமான ஒன்றாக இருந்தது. சிலர் இது எளிதான தேர்தல் எனக்கூறலாம். ஆனால் அப்படி இல்லை. அவர்கள் (பா.ஜ.க.) எங்களுக்கு எதிராக சதி செய்த விதம், அவர்கள் எங்களுக்கு எதிராக அரசு எந்திரத்தை பயன்படுத்திய முறை, நாங்கள் இதுவரை சந்தித்த தேர்தல்களில் இதுதான் கடினமான தேர்தல் என காட்டியது. எங்களுக்கு எதிரான பிரசாரத்தை பரப்புமாறு ஊடகங்களை அவர்கள் நிர்ப்பந்தித்தனர். (சத்யேந்தர் ஜெயின், டெல்லி திகார் சிறையில் இருப்பது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டதை இப்படி குறிப்பிட்டார்)

நேர்மறை அரசியல்

நாங்கள் நேர்மறையான அரசியல் செய்கிறோம். எங்கள் பணிகளைப் பற்றியே பேசுகிறோம். பா.ஜ.க. போலி வீடியோக்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் கடிதங்கள் வெளியிட்டு, எங்கள் பணிகளைக்கூட விவாதிக்க அனுமதிக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story