பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு
மாணவி பலாத்கார வழக்கில், ஆசிரியரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
மாணவி பலாத்கார வழக்கில், ஆசிரியரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம்
துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா படவனஹள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பள்ளியில் மஞ்சுநாத் என்பவர் ஆசிரியராக உள்ளார். அவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவர் அதே பள்ளியை சேர்ந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என்று கூறி மாணவிக்கு ஆசிரியர் மஞ்சுநாத் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி யாரிடமும் இதுபற்றி கூறவில்லை. எனினும் மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது.
மனு தள்ளுபடி
இதையடுத்து சிறுமி கொடுத்த தகவலின் பேரில் படவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆசிரியர் மஞ்சுநாத்தை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பலாத்கார வழக்கில் தொடர்புடையதால், ஆசிரியர் மஞ்சுநாத்தை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்ககோரி, ஆசிரியர் மஞ்சுநாத் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, பள்ளி மாணவி பலாத்கார வழக்கு விசாரணையில் உள்ளதால், ஜாமீன் வழங்க முடியாது என கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.