இமாசல பிரதேசம்: 5.25 லட்சம் மாணவர்கள் பள்ளி சீருடை வாங்க நேரடி வங்கி பணபரிமாற்றம்
இமாசல பிரதேசத்தில் 5.25 லட்சம் மாணவர்கள் பள்ளி சீருடை வாங்கி பயன் பெறும் வகையில், நேரடி வங்கி பணபரிமாற்றம் செய்ய அரசு முடிவு செய்து உள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கூ கூறும்போது, பெற்றோரின் கூடுதல் நிதி சுமையை குறைக்க அரசு புது முடிவை எடுத்து உள்ளது.
இதன்படி, மாணவர்கள் பள்ளி சீருடை வாங்க உதவியாக அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணபரிமாற்றம் நடைபெறும். இது வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்படும் என உறுதிப்படுத்தப்படும்.
இதற்கு முன்பு பள்ளி சீருடை வாங்க மாணவர்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் நீண்ட வினியோக முறை முன்பு இருந்து வந்தது. ஆனால், தற்போது அவர்கள் உடனடியாக சீருடை பெற்று விட முடியும்.
இதேபோன்று மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வி உட்கட்டமைப்பை வழங்குவதற்கான பணியிலும் அரசு ஈடுபட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையால், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தலா ரூ.600 வழங்கப்படும். இதனால், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் படிக்கும் 5.25 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள்.