ஐதராபாத் பலாத்கார வழக்கு; சிறுமி, மைனர் சிறுவனின் புகைப்படம் வெளியீடு: பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கண்டனம்


ஐதராபாத் பலாத்கார வழக்கு; சிறுமி, மைனர் சிறுவனின் புகைப்படம் வெளியீடு:  பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கண்டனம்
x

ஐதராபாத் பாலியல் பலாத்கார வழக்கில் சிறுமி, மைனர் சிறுவனின் புகைப்படங்களை வெளியிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.



ஐதராபாத்,



தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த 28ந்தேதி ஒரு தனியார் கிளப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற 17 வயது சிறுமியை 5 பேர் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவு ஆகியுள்ளார். அவரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரில் 3 பேர் மைனர் ஆவார்கள். மற்ற இருவர், சாதுதீன் மாலிக் மற்றும் உமர்கான் ஆவர். இவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் தோழமை கட்சியான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.

சம்பவம் நடந்ததாக கூறப்படுகிற சொகுசு கார், தெலுங்கானா மாநில அரசில் முக்கிய பங்கு வகிக்கிற தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் ஒருவருக்கு உரியது என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒன்றாக குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ் சில வினாடிகள் ஓட கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் மைனர் சிறுவன் ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளன.

இதுபற்றி ராவ் கூறும்போது, இந்த மைனர் சிறுவனுக்கு வழக்கில் தொடர்பில்லை என போலீசார் அவசர அவசரம் ஆக கூறுகின்றனர். அந்த சிறுவன் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரின் மகன். சிறுவனுக்கு தொடர்பில்லை என போலீசார் கூறிய நிலையிலேயே, இந்த சான்றுகளை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது என கூறியுள்ளார.

எம்.எல்.ஏ.வின் மகனுக்கு வழக்கில் தொடர்பு உள்ளது என்பதற்கான வீடியோ சான்று என்னிடம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் டுவிட்டரில், பலாத்கார வழக்கின் குற்றவாளிகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வின் மகனும் உண்டு.

இந்த வீடியோவை வெளியிட்டு, வழக்கு, சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு ரகுநந்தன் நியாயமற்ற ஒன்றை செய்து விட்டார். பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுக்கு இடையேயான புனிதமற்ற உறவால் இப்படி செய்யப்பட்டு உள்ளதா? ஒரு சிறுமிக்கு கிடைக்கும் நீதியை விட உங்களது பிணைப்பு முக்கியத்துவம் பெற்று விட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story