2014-ம் ஆண்டில் இந்தியா-நேபாள உறவுக்கான 'ஹிட்' பார்முலாவை வழங்கினேன்: பிரதமர் மோடி பேச்சு
இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் உறவுகளுக்கான 'ஹிட்' பார்முலாவை 9 ஆண்டுகளுக்கு முன் வழங்கினேன் என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
புதுடெல்லி,
நேபாளத்தில் புதிய பிரதமராக 3-வது முறை பொறுப்பேற்று கொண்ட பின்னர், புஷ்ப கமல் தஹல் பிரசண்டா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது இந்த வருகையின்போது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசியுள்ளார்.
இதன்பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சரக்கு ரெயில் போக்குவரத்து சேவையை தலைவர்கள் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதன்பின்பு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள், பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசண்டா முன்னிலையில் நடைபெற்றன. இதுபற்றி பிரதமர் மோடி ஊடகங்களின் முன் பேசும்போது, போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டு உள்ளன. மக்களின் இணைப்பை அதிகரிக்க புதிய ரெயில் வழிகளை நாம் நிறுவியுள்ளோம்.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகால மின்சார வர்த்தக ஒப்பந்தமும் இன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது நமது நாடுகளின் மின்சார பிரிவுகளுக்கு வலிமை தரும்.
இரு நாடுகள் இடையேயான மதம் மற்றும் கலாசார உறவுகள் மிக பழமையானது மற்றும் வலிமையானது. இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில், ராமாயண பாதை தொடர்புடைய திட்டங்களை விரைவுப்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என பேசியுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, 9 ஆண்டுகளுக்கு முன், 2014-ம் ஆண்டில் நேபாளத்திற்கு முதன்முறையாக நான் பயணம் மேற்கொண்டது நினைவில் இருக்கிறது. அப்போது, இந்தியா-நேபாள உறவுக்கான 'ஹிட்' (hit) பார்முலாவை 9 ஆண்டுகளுக்கு முன் நான் வழங்கினேன். அது நெடுஞ்சாலை வழிகள் (ஹைவேஸ்), டிஜிட்டல் வழிகள் (ஐ-வேஸ்) மற்றும் போக்குவரத்து வழிகள் (டிரான்ஸ்-வேஸ்) ஆகும்.
இரு நாடுகளுக்கு இடையேயும், அதுபோன்ற தொடர்புகளை நாம் உருவாக்குவோம் என்றும் நம்முடைய எல்லைகள் நமக்கு இடையேயான தடைகளாக இருக்க கூடாது என்றும் நான் கூறினேன். நேபாள பிரதமரும் மற்றும் நானும் இன்றைய தினம், பல முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறோம். அது வருங்காலத்தில் நம்முடைய நல்லுறவை ஒரு சூப்பர் ஹிட்டாக மாற்றும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.