"சுதந்திர தினத்தில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன"-விராட் கோலி


சுதந்திர தினத்தில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன-விராட் கோலி
x

image courtesy; AFP

தினத்தந்தி 15 Aug 2023 7:46 AM GMT (Updated: 15 Aug 2023 8:36 AM GMT)

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல பிரபலங்களும் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், 'அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்' என பதிவிட்டுள்ளார்.

கோலி வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில் சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 'சுதந்திர தினம் நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். சுதந்திர தினமான ஆகஸ்டு 15ஆம் தேதி என்னுடைய தந்தையின் பிறந்த நாள். மேலும் பல உணர்வுகள் இந்த நாளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சாதித்தவைகளை நினைத்து பெருமையாக உணர்கிறேன். மேலும் பெரும்பாலான சுதந்திர தினங்களில், நான் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன் அல்லது தேசிய கொடியை ஏற்றியுள்ளேன். அதில் தேசிய கீதம் இசைக்கப்படுவது பெருமைக்குரிய தருணமாக இருக்கும்' என கூறியுள்ளார்.

மேலும் அவர், 'சுதந்திர தினத்தில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. என்னுடைய மாநிலமான டெல்லியில் சுதந்திர தினம் அன்று பட்டம் விடுவதை கலாசாரமாக கொண்டுள்ளனர். நான் சிறு வயதில் வளரும் பருவத்தில் எனக்கு அது மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. எங்கள் வீட்டில் ஒருநாள் முன்பே பட்டம் செய்து விடுவோம். அதனை சுதந்திர நாள் அன்று பறக்க விடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொதுவாக சுதந்திர தினத்தன்று டெல்லியில் காற்று அதிகமாக வீசும்' என தனது சிறுவயது கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.


Next Story