கர்நாடகாவில் சாலைகளில் தேங்கிய வெள்ள நீரில் குளித்து மக்கள் நூதன போராட்டம்


கர்நாடகாவில் சாலைகளில் தேங்கிய வெள்ள நீரில் குளித்து மக்கள் நூதன போராட்டம்
x

கர்நாடகாவில் சாலைகளின் நிலையை கண்டித்து உள்ளூர்வாசிகள் தேங்கி இருந்த வெள்ள நீரில் குளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தும்கூரு,



கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த மாதம் கனமழை பெய்ததில், வெள்ளநீரில் சிக்கி மக்கள் தவித்தனர். இதனால், ஐ.டி. ஊழியர்கள் உள்பட பலர் டிராக்டரில் தங்களது பணியிடங்களுக்கு சென்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூருவில் மீண்டும் வெள்ள பாதிப்புக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். சாலைகளில் வெள்ள நீர் வடிந்து செல்ல வழியில்லாத சூழல் காணப்படுகிறது.

இதேபோன்று, தும்கூரு மாவட்டத்தில் பல இடங்களில் தெருக்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. மாவட்டத்தின் ஹலிகேரி பகுதியில் 4 கி.மீ. தொலைவுக்கு சாலை முழுவதும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது.

இதனால், உள்ளூரில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்லவோ அல்லது திரும்பவோ முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஹலிகேரி பகுதியில் வசிக்க கூடிய மக்கள், தெருக்களில் மழை நீர் தேங்கியிருந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.

அவர்களில் சிலர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சேறு நிறைந்த நீரை வாளியில் எடுத்து உடலின் மீது ஊற்றி கொண்டனர். சாலைகளை சீர் செய்யும்படி அதிகாரிகளிடம் பல முறை வேண்டுகோள் வைத்து விட்டோம்.

ஆனால், அதில் பலனில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். இதனை அந்த பகுதியில் வசிப்பவர்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.


Next Story