கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம்


கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம்
x
தினத்தந்தி 18 Dec 2023 3:19 PM GMT (Updated: 18 Dec 2023 3:21 PM GMT)

பொதுமக்கள் போக்குவரத்துக்கு முடக்கம் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது ஆகியவை தற்போது தேவை இல்லை என மந்திரி கூறியுள்ளார்.

மடிகேரி,

கேரளாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் காணப்படுகிறது. இதனை முன்னிட்டு, கேரளாவை ஒட்டிய கர்நாடகாவில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்கள் முக கவசங்களை அணிவது கட்டாயம் என கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. இதுபற்றி கர்நாடகாவின் சுகாதார மந்திரி தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் கொண்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் கொண்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு கேட்டு கொண்டுள்ளது.

இதுபோன்ற அறிகுறிகள் கொண்டவர்கள் மற்றும் சந்தேகத்திற்குட்பட்ட நபர்களிடம் பரிசோதனைகளை அதிகரிக்கும்படியும், கேரள எல்லையையொட்டிய பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து நிலைமையானது கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்துக்கு முடக்கம் விதிப்பது மற்றும் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிப்பது ஆகியவை தற்போது தேவை இல்லை என கூறிய அவர், இதுபற்றிய அறிவுறுத்தல் ஒன்றை அரசு கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார்.


Next Story