'இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது; மாநில சட்டசபை தேர்தல்களுக்கு அல்ல' - காங்கிரஸ் விளக்கம்


இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது; மாநில சட்டசபை தேர்தல்களுக்கு அல்ல - காங்கிரஸ் விளக்கம்
x

மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி இருக்காது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. அண்மையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது 27 கட்சிகளைக் கொண்டிருக்கும் 'இந்தியா' கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது என்றும், மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது. மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல. மராட்டிய மாநில சட்டசபை தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து எதிர்கொண்டாலும், மற்ற மாநிலத் தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணி இருக்காது. இருப்பினும் மக்களவை தேர்தலில் 27 கட்சிகளைக் கொண்ட 'இந்தியா' கூட்டணி ஒன்றாக போட்டியிடும்.

நாட்டிலேயே இதுவரை பா.ஜ.க.வை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்காத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை தோற்கடிக்கவே 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை காப்பாற்ற பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டியது அவசியம்.

2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தேர்தலை கருத்தில் கொண்டு இந்த யாத்திரை நடத்தப்படவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். சித்தாந்தங்களின் போராகவே இதைப் பார்க்கிறோம். இந்த யாத்திரை அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.


Next Story