இந்தியா-வங்காளதேசம் ஐ.டி., விண்வெளி துறையில் விரிவான ஒத்துழைப்புடன் செயல்பட முடிவு; பிரதமர் மோடி
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஐ.டி., விண்வெளி, அணுசக்தி துறையில் விரிவான ஒத்துழைப்புடன் செயல்பட முடிவு செய்துள்ளதென பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இருவரும், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மறுஆய்வு செய்ததுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்று ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஹசீனா 2015-ம் ஆண்டு முதல் 12-வது முறையாக சந்தித்து பேசுகின்றனர். இதற்கு முன், ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹசீனா, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொண்டனர். இதனையொட்டி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, வங்காளதேசம் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆனதற்கான கொண்டாட்டத்தில் கடந்த ஆண்டு நாங்கள் ஈடுபட்டோம். வருகிற காலங்களில் இந்தியா-வங்காளதேசம் இடையேயான நட்புறவு புதிய உச்சம் தொட்டு சாதனை படைக்கும்.
வங்காளதேசம் இன்று இந்தியாவின் பெரிய வளர்ச்சிக்கான நட்பு நாடாக உள்ளதுடன், இந்த பகுதியில் பெரிய வர்த்தக உறவுக்கான நாடாகவும் திகழ்கிறது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பிலும் தொடர்ந்து வளர்ச்சி காணப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் விரைவாக அதிகரித்து வருகிறது.
நாங்கள் ஐ.டி., விண்வெளி மற்றும் அணுசக்தி துறையிலும் விரிவான ஒத்துழைப்புடன் செயல்படுவது என முடிவு செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இதேபோன்று, இரு நாடுகளுக்கு இடையே மின் பகிர்வுக்கான இணைப்புகளை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன என்று அவர் பேசியுள்ளார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அதற்கு முன்பு அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வங்காளதேச குடிமக்களுக்கு இந்திய அரசு ஆதரவாக நின்ற இரண்டு விசயங்களை அவர் குறிப்பிட்டு பேசினார்.
அதில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரின்போது, வங்காளதேச மாணவர்கள் பலர் சிக்கி தவித்தனர். பின்பு போலந்துக்கு வந்தனர். அவர்களை இந்திய மாணவர்களை மீட்டதுபோல், மீண்டும் சொந்த நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது இந்திய அரசு.
இந்த தொடக்க முயற்சிக்காக பிரதமருக்கு (மோடி) நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையில்... தெளிவாக நட்பு ரீதியிலான நல்லிணக்கம் காட்டியுள்ளீர்கள் என இந்திய அரசை அவர் பாராட்டினார்.
கொரோனா பெருந்தொற்று விரைவாக பரவிய காலத்தில் நட்பு ரீதியிலான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வழங்கி பெரும் உதவிகளை செய்து இன்முகம் காட்டியது என கூறினார்.
வங்காளதேசம் மட்டுமின்றி, சில தெற்காசிய நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி, உண்மையில் மிக மிக உதவியாக பிரதமர் மோடி இருந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அதுதவிர்த்து, நாங்கள் சொந்த பணம் கொடுத்தும் தடுப்பூசிகளை வாங்கினோம். பிற நாடுகளும் வங்காளதேசத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி பங்காற்றின என ஹசீனா கூறியுள்ளார்.
வேற்றுமைகள் இருப்பினும், அவற்றை பேச்சுவார்த்தை வழியே தீர்த்து கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளும் அதனையே செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது என அவர் வலியுறுத்தி கூறினார்.