நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் இந்தியா


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் இந்தியா
x

Photo Courtacy : Twitter/@MEAIndia

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அங்காரா,

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி 5000 பேரும் மற்றும் சிரியாவில் 2000 பேரும் பலியாகி உள்ளனர். லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர் இன்னும் கண்டெடுத்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டிடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் மீட்புப் பணிகளுக்காக சிறப்பு குழுக்கள், மோப்ப நாய்கள், உபகரணங்களை உலக நாடுகள் வழங்கி ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியா சார்பில் துருக்கிக்கு இன்று காலை இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பி இருந்தது.

ஆனால், துருக்கியில் உள்ள மூன்று விமான நிலையங்களும் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்டுள்ளதால், இத்தகைய உதவிகள் வந்து சேர்வதில் சவால்கள் நிலவுகின்றன.

இந்நிலையில் சிரியாவுக்கு இந்திய விமானப் படையின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துகளை மத்திய அரசு இன்று அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story