'இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்' பா.ஜனதாவின் ஊழலை அம்பலப்படுத்துவோம்: கெஜ்ரிவால்
இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.
புதுடெல்லி,
மதுபானகொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் கூறியதாவது:-
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் 4 பேரை சிறைக்கு அனுப்பியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 10 ஆண்டுகள்தான் ஆகிறது. இரண்டு மாநிலங்களில் தான் ஆட்சி செய்கிறது. எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைத்தார்கள். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் ஊழலை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.
ஜூன்4-ம் தேதியுடன் பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார். அமித்ஷாவை பிரதமராக்க மோடி பிரசாரம் செய்கிறார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பா.ஜனதாவில் இணைத்து வருகிறார்கள். ஆனால் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக மோடி பேசி வருகிறார். நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன். எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.
என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்காக சிந்த தயாராக உள்ளேன். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள். பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று நான் கேட்கிறேன். மோடி ஓய்வு பெற்றால் அவரது உத்தரவாதத்தை நிறைவேற்ற போவது யார்? பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளார். ஒரே நாடு, ஒரே திட்டத்தை கொண்டு வருவதுதான் பிரதமர் மோடியின் லட்சியம். என்னை கைது செய்வதன் மூலம் நாட்டில் எவரையும் கைது செய்ய முடியும் என்று மோடி காட்ட விரும்புகிறாரா? நாட்டு மக்களை முட்டாள்கள் என நினைக்க வேண்டாம். அவர்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆம் ஆத்மி கட்சியும் அதில் பங்கு பெறும்" இவ்வாறு அவர் பேசினார்.