சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா - விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி


சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா - விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி
x
தினத்தந்தி 17 July 2022 5:41 PM IST (Updated: 17 July 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

விமானப்படை எல்லை பகுதிகளில் தரையிலிருந்து வான்வழியாக தரையிறங்கும் ஆயுத திறன்களை வலுப்படுத்தி உள்ளது என விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன.

எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்காகவும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சந்திப்பில், சீனாவின் ஜே-11 போர் விமானம் ஒன்று, பறக்க தடை விதிக்கப்பட்ட இந்திய மண்டலத்திற்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம் மற்றும் மோதல் பகுதியில் பறந்தது பற்றியும் இந்தியா எழுப்ப உள்ளது.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி பேட்டி அளித்தார். அதில், சீன விமானத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சீன விமானங்கள் அசல் கட்டுப்பாட்டு கோடுக்கு மிக அருகில் வரும் போது, நாங்கள் போர் விமானங்களை தயார் நிலையில் வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம். இதன் காரணமாக சீன விமானங்கள் எல்லை பகுதிக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜீன் மாதம் கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் கிழக்கு லடாக்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதி முழுவதும் விமானப்படை ரேடார்களை பயன்படுத்த தொடங்கினோம். தற்போது அனைத்து ரேடார்களையும் இணைத்து கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒருங்கிணைத்துள்ளளோம். இதன் மூலம் அசல் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள வான் பகுதிகளை எங்களால் கண்காணிக்க முடிகிறது.

விமானப்படை வடக்கு எல்லை பகுதிகளில் தரையிலிருந்து வான்வழியாக தரையிறங்கும் ஆயுத திறன்களை வலுப்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் மொபைல் கண்காணிப்பு நிலையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீன விமானத்தின் செயல்பாடு எங்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story