கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்துவதில் இருந்து விடுபடும் இந்தியா: அடுத்த மாதம் மத்திய அரசு அறிவிக்கிறது


கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்துவதில் இருந்து விடுபடும் இந்தியா: அடுத்த மாதம் மத்திய அரசு அறிவிக்கிறது
x

கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்தும் வழக்கத்தில் இருந்து இந்தியா விடுபட்டதாக அடுத்த மாதம் மத்திய அரசு அறிவிக்கிறது.

புதுடெல்லி,

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் செயலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை கண்காணிக்க மாநில கண்காணிப்பு குழுக்களும், மாவட்ட கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இருப்பினும், இன்னும் இந்த வழக்கம் ஆங்காங்கே நீடித்து வருவதாக தெரிய வந்தது. பாதாள சாக்கடை பணியின்போது 1,056 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 931 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இலக்கு

இதற்கிடையே, மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் வழக்கத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அந்த வழக்கத்தில் இருந்து இந்தியா விடுபட்டதாக, 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

அதற்குள் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் அந்த வழக்கத்தை ஒழித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார் தலைமையில் நடந்த மத்திய கண்காணிப்பு குழு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

246 மாவட்டங்கள் தாமதம்

கூட்டத்தில் ஒரு உயர் அதிகாரி கூறியதாவது:-

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் வழக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியா என்று அறிவிப்பதற்கான இலக்கு நெருங்கி வருகிறது. ஆனால், நாடு முழுவதும் உள்ள 766 மாவட்டங்களில் 520 மாவட்டங்கள் மட்டுமே இதுவரை அப்படி அறிவித்துள்ளன.

இன்னும் 246 மாவட்டங்களிடம் இருந்து அத்தகைய அறிக்கை வரவில்லை. அந்த மாவட்டங்கள் இடம்பெற்றுள்ள மாநிலங்கள், விரைவில் அறிக்கை அனுப்ப வேண்டும். ஏனென்றால், அந்த இலக்கை எட்டியதாக அடுத்த மாத இறுதியில் அறிவிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார்.


Next Story